தனிமனிதன் அல்லது சமூகம் தன் நிலைபாட்டின் மீதான பொருண்மையின் மீது, அதன் சாராம்சங்கள் மீது காலத்தை கடக்க முடியாத நுனிமங்கள் மீது தொங்கி கொண்டிருப்பது தான் அடிப்படைவாதம். இது தனிமனிதர்களுக்கிடையே அல்லது சிவில் சமூகங்களுக்கிடையே கருத்தியல் ரீதியான, செயல்பாட்டு ரீதியான மோதல்களையும், அதிகார நவிற்சிகளையும் உருவாக்குகிறது. உலகம் அதை எதிர்ப்பவர்கள் இருப்பதால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும் என்ற கேதேவின் கோட்பாடு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. உலக வரலாற்றில் மாபெரும் அரசுகள் எல்லாம் மதத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. அவற்றின் நம்பிக்கை, கலாசாரம், அரசியல் மீதே அதன் எதிர்செயல்பாடுகள் நிகழ்ந்தேறின. வரலாறு முன்னோக்கி செல்கிறது என்று அழுவதோ அல்லது சிரிப்பதோ அல்ல. மாறாக அதை புரிந்து கொள்வதே அவசியமான ஒன்றாகும் என்ற ஸ்பினோசாவின் கோட்பாட்டு அறிவுறுத்தல் அடிப்படைவாதம் வேர்கொண்டு நிற்கும் இந்த சூழலில் மிகப்பொருத்தமாக இருக்கிறது. இதன் தர்க்க ஒழுங்கை, கோட்பாட்டு பொருண்மையை மார்க்சிய தத்துவார்த்த மற்றும் வரலாற்று கண்ணோட்டத்தோடு நடப்பு உலகில் ஆராய்ந்து வருபவர் பாகிஸ்தான் புலம் பெயர் அறிவுஜீவியான தாரிக் அலி. ஒரு விசனகரமான அதே நேரத்தில் நாடகீயமான இளமைக்காலம் அவருக்குரியது. தற்போதைய பாகிஸ்தானின் லாகூரில் 1943 ல் நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் தாரிக் அலி பிறந்தார். இவருடைய தந்தை பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தவர். சிறந்த, விசாலமான வாழ்க்கை பின்புலத்தை கொண்டவர். நிலப்பிரபுத்துவ பின்னணியை கொண்ட போதும் மார்க்சிய கோட்பாட்டின் மீது ஆர்வமும், தாக்கமும் கொண்டவர். இவர் தந்தையின் திருமணமே மிகுந்த போராட்டத்திற்கிடையே தான் நடைபெற்றது. அதற்கு அன்றைய பாகிஸ்தானில் நிலவிய மாற்று சிந்தனைகள் மீதான வெறுப்பும், மன அயற்சியுமே காரணம். அதன் தொடர்ச்சியின் மீதான எதிர்செயல்பாடு மற்றும் சிந்தனையே தாரிக் அலியின் உருவாக்கம். அன்றைய காலத்தில் லாகூர் பல கலாசாரத்தை கொண்ட காஸ்மோபாலிட்டன் நகரமாக இருந்தது. இந்த நகரத்தின் நெளிவான நகர்வுகளுக்கிடையில் தாரிக்கின் இளமைகாலம் சவால் ஒன்றின் முன்னோக்கத்திற்காக காத்திருந்தது. பள்ளிப்படிப்பை லாகூரில் முடித்த தாரிக் அலி பஞ்சாப் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தன் தந்தையை போன்று இளமைகாலம் தொட்டே தாரிக் மத விவகாரத்தில் அவநம்பிக்கையாளராக இருந்தார். இதன் தொடர்ச்சி அவரை கல்லூரி பருவத்தில் முதிர்ச்சி பெற்ற அரசியல் மற்றும் தத்துவ சிந்தனையாளராக மாற வைத்தது. பஞ்சாப் கல்லூரி வாழ்க்கையின் தொடக்க காலங்களில் அவரின் பேச்சும், எழுத்தும் பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகார வர்க்கத்தை உசுப்பி விட்டது. காலப்போக்கின் நகர்வில் தாரிக்கின் தத்துவார்த்த செயல்பாடுகள் அவரின் பாகிஸ்தான் இருப்பை கேள்விக்குறியாக்கின. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அக மற்றும் புற நிர்பந்தங்கள் காரணமாக தாரிக் பாகிஸ்தானை விட்டு லண்டனுக்கு செல்ல நேர்ந்தது. கீழைச் சிந்தனையாளர்கள் பலரின் வாழ்க்கை பின்னணியை நாம் நோக்கும் போது அவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்தல் அல்லது புலப்பெயர்ச்சிக்குள்ளாகுதல் என்ற கட்டத்தில் இருந்து தான் அவர்களின் எதார்த்த வாழ்வின் இன்னொரு கட்டம் தொடக்கம் பெறுகின்றது. இதன் காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. நேர்மாறான நிலையில் மேற்கத்தியர்கள் எவரும் தன் செயல்பாட்டிற்காக கீழைத்தேயத்திற்கு பெயர்ந்து வருவதில்லை. (விதிவிலக்கான தருணங்கள் தவிர) மேற்கு நாடுகளின் வட்டத்திற்குள் தான் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன. கீழை சிந்தனையாளர்கள் மேற்கை தங்கள் சிந்தனைக்கான சுதந்திர வெளியாக, செயல்பாடுகளுக்கான பரப்பிடமாக காண்பதே அதற்கு காரணம். அது மாதிரியே தாரிக்கின் லண்டன் வாழ்க்கை அவரின் ஆளுமை உருவாக்கத்திற்கான தொடக்க புள்ளி. அதற்கான விரிவான சாத்தியப்பாடுகளை அது உருவாக்கி விட்டிருந்தது. லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பொருளாதாரம் படித்த தாரிக் படிக்கும் காலத்தில் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். அவருக்கான போராட்ட கள செயல்பாடுகள் அதன் மூலம் தொடக்கம் பெற்றன. இளமைகால தத்துவார்த்த வாசிப்பும், செயல்பாடுகளும், பல்கலைகழக பொருளாதார படிப்பும் அவரை அறிவுஜீவி என்ற கட்டத்திற்கு நகர்த்தின. வியட்நாம் போர்காலத்தில் பெர்டிணான்ட் ரஸ்ஸல் மற்றும் ழீன் பால் சார்த்தர் ஆகியோரின் அறிமுகம் தாரிக் அலிக்கு கிடைத்தது. அவர்களுடனான உரையாடல்கள் மூலம் தாரிக் தன் சிந்தனைமுறையை விசாலமாக்கி கொண்டார். அவரின் அனுபவ வெளி மேற்கத்திய அறிவுஜீவிகளுடனான தொடர்ந்த உரையாடல்கள் மூலம் அக அனுபவ முதிர்ச்சியாக மாற்றியது. வியட்நாமுக்கு பல சிந்தனையாளர்கள், மனித உரிமை போராளிகள் இணைந்த குழுவாக சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அதிலிருந்து அமெரிக்க எதிர்ப்பு சிந்தனை அவரின் கோட்பாட்டு தளத்தில் மையம் கொள்ள தொடங்கியது. ஜியாவுல் ஹக் தலைமையிலான ராணுவ அரசின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக அவருக்கு சில ஆண்டுகளாக பாகிஸ்தானிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. இது இன்னொரு வகையில் மேற்கத்திய நாடுகளில் அவரின் பெயரை குவியப்படுத்தியது. வரலாறு, மறுமலர்ச்சிகால தத்துவம் சார்ந்த தொடர்ச்சியான, விசாலமான, ஆழ்ந்த வாசிப்பு காரணமாக தாரிக் அலி தன் பின்னால் கணிசமான வாசக வட்டத்தை இழுத்துக்கொண்டார். இதன் பின்னர் அவரின் முறைப்படியான எழுத்து வாழ்க்கை 1960 ல் லண்டனில் பிரட் ஹாலிடேயுடன் இணைந்து New left review என்ற கோட்பாட்டு சஞ்சிகையை தொடங்கியதில் இருந்து தொடங்குகிறது.இதே காலகட்டத்தில் சர்வதேச டிராஸ்கிய கட்சியின் உறுப்பினரானார். பிரிட்டனில் அதற்கு தலைமையும் வகித்தார். அப்போது கட்சியினருடன் இணைந்து trotsky for beginners என்ற நூலை எழுதினார். பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தோல்வியை டிராஸ்கிஸ்டுகள் கையாள தவறியது குறித்த விஷயத்தில் தாரிக் அலிக்கு முரண்பாடு ஏற்பட்டது. அது குறித்து எழுதவும் செய்தார். இதை தொடர்ந்து டிராஸ்கிஸ்டுகளுக்கும் இவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இவரின் முதல் புத்தகம் இஸ்ரேல் குறித்த சித்திரமாக 1968 and after:Inside the revolution என்ற பெயரில் 1978 ல் வெளிவந்தது.அதன் பிறகு பாகிஸ்தான் வரலாறு, அதன் இராணுவ சர்வாதிகாரம் குறித்த புத்தகமாக Can pakistan survive: Death of a state வெளிவந்தது. தாரிக்கின் தொடர்ச்சியான எழுத்துக்கள் அவரின் அடுத்தடுத்த நூல்களை வெளிக்கொணர்ந்தன. 1984 ல் “இருபதாம் நூற்றாண்டில் ஸ்டாலினியம்” குறித்த நூல் ஒன்றை வெளியிட்டார். அது ஸ்டாலினியம் குறித்த கடும் விமர்சன ஆய்வுமுறையாக இருந்தது. இதன் சமகாலத்தில் தாரிக் புனைவு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் பிரதிபலிப்பாக Shadow of pomegranate tree, Book of saladin, Stone woman போன்ற நாவல்கள் அவரிடம் இருந்து வெளிவந்தன. அவரின் ஆக்கங்களில் முக்கிய கோடிடும் பகுதியாக 2002ல் வெளியான The clash of fundamentalism இருந்தது. அடிப்படைவாதம் வேர்கொள்ளும் முறை, அதன் தர்க்கரீதியான தொடர்ச்சி, இருபதாம் நூற்றாண்டு மத்திய கிழக்கின் பிராந்திய முரண்பாடுகள், மோதல்கள், போர்கள், கலாசார தர்க்கவியல் போன்றவற்றை குறித்த விரிவான ஆய்வுமுறையாக இருந்தது. இதன் மூலம் மேற்கு மற்றும் மத்தியகிழக்கு வட்டாரத்தில் தாரிக் அலி குவியமான அறிவு ஜீவியாக முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கு பிந்தைய ஆண்டில் ஈராக் மீதான அமெரிக்க போரை முன்வைத்து, ஏகாதிபத்திய கருத்தியலையும், வரலாறையும் விளக்கும் Bush in Babylon வெளிவந்தது. இந்த நூலும் அறிவுத்துறை வட்டாரங்களில் குறிப்பிட்ட மாறுதலை ஏற்படுத்தியது. பின் மார்க்சிய, பின்காலனிய, எதிர் அடிப்படைவாத தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் தாரிக் அலி தற்போது லண்டனில் வசிக்கிறார்.
Read the rest of this entry »






