RSS

இதயத்தில் இனிக்கின்ற…

21 Jan

இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் பத்தியைக் கவனியுங்கள். ‘இதயம்’ என்று துவங்கி ‘மொழி’ என்று முடிகிறது. பின் ‘தமிழ்’ என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் ‘மொழி’ என்னும் சொல்லிலேயே துவங்கி ‘இதயம்’ என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது.

இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.அதோடு இக்கவிதை இதுவரை கையாளப்படாத யாப்பிலக்கண வடிவம். இதுவரை அந்தாதி என்ற அமைப்பு மட்டுமே யாப்பில் உண்டு. அது முடிந்த சொல்லில் தொடங்கும் அடுத்த வரியைக் கொண்டதாய் அமையும். இக்கவிதையோ, முடிந்ததில் தொடங்கியதோடில்லாமல், தொடங்கிய சொல்லிலேயே முடிவதுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிரமமான வடிவமைப்புக்குள் கருத்தாழமிக்க கவிதையை அமரச்செய்ய எனக்கு சொற்கள் தந்த தமிழன்னைக்கு நன்றி.

இதயத்தில் இனிக்கின்ற
மொழி – தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்

கவிதைக்குள் விளைகின்ற
வைரம் – தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற
கவிதை

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து – தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்

ஓசைக்குள் கூடுகட்டும்
சுகம் – தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற
ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும்
வாசம் – தமிழ்
வாசத்தால் எழுந்தாடும்
காற்று

பார்வைக்குள் விரிகின்ற
வானம் – தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற
பார்வை

மண்ணுக்குள் கருவான
வளம் – தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற
மண்

இயற்கைக்குள் முத்தாடும்
மழை – தமிழ்
மழையினில் தழைக்கின்ற
இயற்கை

மனசுக்குள் எழுகின்ற
உணர்வு – தமிழ்
உணர்வினுள் கசிகின்ற
மனசு

மூச்சுக்குள் உள்ளாடும்
தாகம் – தமிழ்
தாகத்தில் தீயாகும்
மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற
இளமை – தமிழ்
இளமையில் திரள்கின்ற
மோகம்

முயற்சிக்குள் முளைவிடும்
சிறகு – தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற
முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும்
கருணை – தமிழ்
கருணையால் வேர்பாயும்
மனிதம்

உயிருக்குள் குடிகொண்ட
மானம் – தமிழ்
மானத்தில் துடிக்கின்ற
உயிர்

http://anbudanbuhari.blogspot.com/இதயத்தில் இனிக்கின்ற…

About these ads
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

%d bloggers like this: