RSS

மோடிக்கு இங்கே யார் வாக்களிக்கப் போகிறார்கள்?

modiநாடு தழுவிய அளவில் மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதுவரை இந்தியத் தேர்தல்களில் ‘அலை’ என்பது பிரச்சினைகளையோ, சாதனைகளையோ, வேதனைகளையோ முன்வைத்து அடித்ததுண்டு. தனிநபர் ஒருவரை முன்வைத்து தேர்தலில் அலை எழுதுவது என்பது அரிதிலும் அரிதானது. அதிலும் நாடு தழுவிய அளவில் தலைவர் ஒருவருக்கு ஆதரவான அலை வீசுகிறது என்பது அபத்தத்திலும் அபத்தமானது.

 • இந்துத்துவா கோலோச்சும் உ.பி.,யில் மோடி அலை வீசுகிறது (வீசியதா என்பதை மே16தான் உறுதி செய்யவேண்டும்; கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பாஜகவுக்கு அங்கே 3வது இடம்தான்) என்று சொன்னால் நம்பலாம். மோடி ஆளும் குஜராத்தில், பாஜக செல்வாக்குள்ள ராஜஸ்தான், ம.பி., கோவா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அப்படியான அலை இருப்பதாக சொன்னால் கூட ஓக்கே. தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாதிரி மாநிலங்களிலும் மோடி சுனாமி தாக்குகிறது என்று இவர்கள் பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் வாயால் கூட சிரிக்க முடியவில்லை. மிசோரம், நாகலாந்தில் எல்லாம் போய் மோடிக்கு ஓட்டு என்று தாமரையை நீட்டினால் வேலைக்கு ஆகுமா?

  குறிப்பாக தமிழ்நாட்டில் இண்டு இடுக்கெல்லாம் மோடிக்கு வாக்குகள் விழ இருப்பதாக இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே பதிவாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் அறுபது சதவிகித வாக்குகளை திமுக-அதிமுக இரண்டும் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக அறுவடை செய்துவருகிறது. இரு கட்சிகளுமே நாலில் ஒரு ஓட்டை (படுதோல்வி அடைந்த தேர்தல்களிலும்கூட) தன்னுடைய வாக்கு வங்கியாக நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. இந்தியாவில் வேறெங்காவது இதுமாதிரியான வாக்கு வங்கியை கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கின்றனவா என்று தெரியவில்லை. காமராஜர் காலத்திலிருந்து கண்ணை மூடிக்கொண்டு காங்கிரஸுக்கு பரம்பரையாக விழும் சொற்ப ஓட்டுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இடதுசாரிகளுக்கும் இதேமாதிரி பரம்பரை வாக்கு வங்கி உண்டு.

  தேர்தலுக்கு தேர்தல் இடம் மாறும் உதிரிக்கட்சிகளான மதிமுக, பாமக, தேமுதிக போன்றவற்றை ஒரே கூட்டணியில் சேர்த்துவிட்டதால் பாஜக கூட்டணி இங்கே முதலிடத்துக்கு வந்துவிட முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உண்டு. ஏதேனும் வலுவான கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடும்போது கன்னியாகுமரியில் மட்டும் வெல்லக்கூடிய வாய்ப்புண்டு. தொண்ணூற்றியெட்டு குண்டுவெடிப்பை தொடர்ந்து கோயமுத்தூரிலும் ஓரளவுக்கு காலூன்றியிருக்கிறார்கள். இவை தவிர்த்து தமிழ்நாட்டில் வேறெங்கும் தனியாக நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது. இப்போது உதிரிகளின் கூட்டணியில் நிற்பதால் சில இடங்களில் அக்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கலாம் அவ்வளவே. அதுவும் கூட விஜயகாந்துக்கு, பாமகவுக்கு, வைகோவுக்கு என்று விழப்போகும் வாக்குகள்தான். மோடிக்கு என்றில்லை. தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ராஜீவுக்கே கூட இங்கே வாக்கு விழுந்ததில்லை. 84லும், 89லும் அதிமுகவோடு கூட்டணியில் இருந்ததால்தான் இங்கே காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை வென்றதே தவிர, குறிப்பாக ராஜீவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை.

  பஸ்களிலும், ரயில்களிலும், கல்லூரிகளிலும், இதர இடங்களிலும் மோடி வந்தால் நல்லது என்று பேசக்கூடிய ஆட்கள்கூட ஓட்டு என்று வந்தால் திமுக அல்லது அதிமுக கூட்டணியைதான் ஆதரிக்கப் போகிறார்கள். மாநிலக் கட்சிகளுக்கே முன்னுரிமை என்பது தமிழனின் அரசியல். தேசியப் பிரச்சினைகளை ஆவிபறக்க விவாதிப்பார்கள். அது வெறும் விவாதத்துக்கான கச்சா மட்டுமே.

  முதல்முறை வாக்காளர்கள் கிட்டத்தட்ட முக்கால் கோடி பேர் தமிழகத்தில் வாக்களிக்கப் போகிறார்கள். அவர்கள் அப்படியே மோடிக்கு குத்து குத்துவென்று குத்தப் போகிறார்கள் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த முதல் தலைமுறை வாக்காளர்களை டெஸ்ட் ட்யூப் பேபிகள் போல ‘சிறப்பு அடைமொழி’ கொடுத்து குறிப்பிடுவது ஏமாற்று வேலை. பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான வாக்காளர்கள் யாருமே திமுக/அதிமுக மற்றும் மாநிலக் கட்சிகளில் இல்லை என்பது போன்ற மாயையை உருவாக்குவது ஏமாற்றுவேலை. இவர்களும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். திமுக/அதிமுக குடும்பங்களில் பிறந்தவர்கள்தான். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று தமிழகத் தலைவர்களின் ஆதரவாளர்கள்தான். பிரம்மன் சொர்க்கத்தில் படைத்து நேரடியாக ஓட்டுரிமை வாங்கிக்கொண்டு குதித்தவர்கள் அல்ல. திமுக / அதிமுக கட்சிகளில் இளைஞர் அணி என்பது அக்கட்சிகளின் வலுவான அமைப்புகளாக இருக்கிறது என்பதை ஊடகங்கள் மறைக்க விரும்புகிறார்களா அல்லது மறக்க விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.

  நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் பாஜகவை ஆதரிப்பார்கள் என்கிற மோடி ஆதரவாளர்களின் எதிர்ப்பார்ப்பு கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலிலேயே ஆட்டம் கண்டுவிட்டது. டெல்லியிலேயே அப்படிதான் என்றால், தமிழகத்தில் இவர்களிடம் தாமரையின் டவுசர் சுத்தமாக கழண்டுவிடும். உண்மையில் தமிழக அடித்தட்டு மக்களிடம், இம்முறை ‘கை’, மத்தியில் வராவிட்டால் ஆண்டுக்கு நூறுநாள் வேலை திட்டம் கேன்சல் ஆகிவிடும் என்கிற அச்சம் இருக்கிறது. தமிழக நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை மின்வெட்டு, விலைவாசி மாதிரி அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்து வாக்களிக்கக்கூடிய மனோபாவம் கொண்டவர்கள். தங்கள் கோபத்தையோ, பாசத்தையோ மாநிலக் கட்சிகளிடம்தான் காட்டுவார்களே தவிர, தேசியக் கட்சிகளை இவர்கள் இதுவரை பொருட்டாக மதித்ததே இல்லை.

  தமிழக மக்கள் ‘கவர்னன்ஸ்’ பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பது புல்ஷிட். 96-01ல் மிகச்சிறந்த மாநில வளர்ச்சியை தந்த கலைஞர் ஆட்சியை தூக்கியெறிந்தவர்கள் இவர்கள். மாதாமாதம் அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ்./ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் சரியான காரண காரியமின்றி பந்தாடி வரும் ஜெயலலிதாவை மூன்று முறை தேர்ந்தெடுத்தவர்கள் தமிழக மக்கள். ‘ஸ்டேட் மாஸ் மெண்டாலிட்டி’ அடிப்படையில் வாக்களித்துவரும் தமிழக மக்களிடம் ‘குஜராத்தைப் பார்’ என்று காட்டி வாக்கு வாங்க முடியாது என்கிற அடிப்படையை புரிந்துகொள்ள முடியும்.

  இம்முறை தமிழகத்தில் தேமுதிக தலைமையில் அமைந்திருக்கும் பாஜக கூட்டணிக்கு யார் யாரெல்லாம் வாக்களிக்கப் போகிறார்கள்?

  ஏற்கனவே பாஜகவுக்கு விழும் இரண்டு, இரண்டரை சதவிகிதம் (மோடி ஃபேக்டர் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலே கூட மேற்கொண்டு அரை சதவிகிதமோ, ஒரு சதவிகிதமோ கூடும்) விழப்போகிறது. கூடுதலாக மதிமுக, பாமக கட்சிகளின் தலா ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான வாக்கு வங்கி, தேமுதிகவின் எட்டு சதவிகித வாக்குகள் என்று அதிகபட்சமாக பதினைந்து, பதினாறு சதவிகிதத்தை தொடப்போகிறார்கள். அவ்வளவுதான். ஓரிரு தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். ஏழெட்டு தொகுதிகளில் டெபாசிட் கூட கிடைக்கலாம். மற்றபடி இது பெரியார் மண்தான். அதில் சந்தேகம் எதுவுமில்லை. மதவெறிக்கு இங்கே இடமில்லை. வேண்டுமென்றால் சாதிவெறியை கூட ’கன்சிடர்’ செய்வார்கள் :)

  தமிழகத்தில் நிஜமான போட்டி என்பது அதிமுக – திமுகவுக்கு இடையே நடக்கக்கூடியதுதான். மற்றவர்கள் தொட்டுக்க ஊறுகாய்தான். வேண்டுமென்றால் சில தொகுதிகளில் இந்த இரு கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய வகையில் ஓட்டுகளை பிரிப்பார்கள். தேர்தல் களேபரம் எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்பாக மிக வலுவாக இருந்தது அதிமுக. அக்கட்சி சரியான கூட்டணியை அமைக்காதது, பிரச்சாரத்தில் தீவிர முனைப்பு செலுத்தாதது போன்ற காரணிகளை பயன்படுத்தி திமுக இடைவெளியை குறைத்து வருகிறது. கோடைகால மின்வெட்டு இம்முறை திமுகவுக்கு சாதகம். இன்றைய தேதியிலும் அதிமுக முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், திமுக மிக நெருக்கமாகவே வந்துக் கொண்டிருக்கிறது. ரிசல்ட் சிக்ஸ்ட்டி – ஃபார்ட்டி என்று இருக்கப் போகிறது. யார் சிக்ஸ்ட்டி என்பதற்காகதான் நாம் மே 16 வரை காத்திருக்க வேண்டும்.

  yuvakrishnaஎழுதியவர் யுவகிருஷ்ணா
  http://www.luckylookonline.com/2014/04/blog-post.html

   
 • தேர்தல் !

  ஒவ்வொரு தேர்தலிலும்
  வெவ்வேறு கூட்டணிகள்
  ஒவ்வாதோர் ஒன்றிணைந்து
  உருவாக்கும் நாடகங்கள்

  திரும்பும் திசைகளெங்கும்
  தேர்தல் பிரச்சார சப்தம்
  திகட்டுமளவு அனுதினமும்
  வாக்குறுதிகள் நித்தம்

 • களப்பணியில் மூழ்கிடும்
  தொண்டர்கள் கூட்டம்
  காய்ந்த வயிற்ருடன் கிடக்கும்
  அத் தொண்டனின் குடும்பம்

  ஆணவங்கள் கொண்டவரும்
  அடங்கி வந்து பிரச்சாரம் செய்வர்
  ஆசைகளை உள்ளடக்கி
  ஆட்சியமைக்க காத்திருப்பர்

  மானங்கள் போனபோதும்
  மாற்றுக்கட்சி நகைத்தபோதும்
  தானங்கள் பலவழங்கி
  தன்னிலையை உயர்த்திக்கொள்வர்

  மக்களாட்சி மலருமென
  மனமுறுக வாக்குரைப்பர்
  வந்தமர்ந்த மறுகணமே
  சிந்தையைவிட்டு மறந்துபோவர்

  எக்கட்சி எதிர்த்து நின்றும்
  ஏகமாய் நம்பியிருப்பார்
  இறுதியில் முடிவுகேட்டு
  ஏமாறுவர் பாமர மக்கள்

  இனியதனை வீழ்த்திடவே
  இதிகாசம் படைத்திடவே

  நலிந்தோரின் துயர்துடைக்க
  நாட்டில் ஒழுங்கை சீர்படுத்த
  நல்லாட்சி அமைந்துடவே
  நாட்டுமக்கள் ஒன்றிணைந்து

  தேர்தலெனும் சந்தையிலே
  தேர்ந்து விலைபோய்விடாமல்
  சிந்தையிலே உதிக்கும் நல்ல
  சிறந்தோர்க்கு வாக்களிப்போம்
  51mmx51mmஅதிரை மெய்சா
  http://nijampage.blogspot.in/2014/04/blog-post_12.html

   
 • Tags:

  மோடியும் 300 எம்.பி.க்களும்

  10151837_823252511035660_995595270940311283_n‘முன்னூறு எம்.பி.க்கள் என் பின்னால் அணிவகுக்க வேண்டும்’ என்று நரேந்திர மோடி பேசியிருக்கிறார். பிஜேபி கூட்டணியில் உள்ள கட்சிகள் அதைக் கேட்டு ஆடிப் போயிருக்கின்றன. பிஜேபியில் உள்ள தலைவர்களோ அசந்து போயிருக்கிறார்கள்.

  எதற்கு குறி வைக்கிறார் மோடி?

  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தவர்கள் அரசியலில் உண்டு. ஒரே கல்லில் ஒரு மரத்தையே வீழ்த்தியவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒற்றைக் கல்லை வீசியெறிந்து ஒரு தோட்டத்தையே கைவசப் படுத்த விரும்பும் அரசியல்வாதியை இந்த நாடு இப்போதுதான் சந்திக்கிறது.

  ‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 273 எம்.பி.க்கள் போதும். அது பெரிய விஷயமல்ல. 300 பேராவது என் பின்னால் அணிவகுக்க வேண்டும். அப்போது என் பேச்சை இந்த உலகமே கேட்கும்!’ என்கிறார் மோடி.

  இந்த வார்த்தைகளை வேறு எந்த தலைவர் பேசியிருந்தாலும் அவரது கட்சிக்காரர்கள் ஆரவாரமாக கைதட்டி இருப்பார்கள். எதிர்க்கட்சிகள் கேலி செய்திருக்கும். ஆனால், மோடி விஷயத்தில் பாருங்கள், இரு தரப்பிலும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

 • மோடி விளையாட்டுப் பிள்ளை அல்ல. விவரம் தெரியாத அரசியல்வாதியும் அல்ல. இந்திய நாடாளுமன்றத்தில் தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது முடிந்துபோன கதை என்பது அவருக்கும் தெரியும். ஆனாலும் உள்ளத்தில் இருப்பதை கொட்டிவிட்டார்.

  பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் கலவரம் வெடித்து நாடெங்கும் பதட்டம் நிலவியது. உணர்ச்சிக் கொந்தளிப்பான அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததுதான் கடைசி மெஜாரிடி. 414 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்தியாவை ஒட்டு மொத்தமாக ராஜிவ் காந்தி மாற்றியமைப்பார் என நாடு எதிர்பார்த்தது. அசுரப் பெரும்பான்மை என்று வர்ணிக்கப்பட்ட பெரும் பலம் இருந்ததால் அவர் எது நினைத்தாலும் செய்திருக்கலாம். ஆனால், அரசியல் அனுபவம் இல்லாததால் தான் நினைத்தவாறு அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்த அவரால் இயலாமல் போனது வேறு விஷயம். அதன் பின்னர் இன்றுவரை எந்த தேர்தலிலும் ஒரு தனிக்கட்சி பெரும்பான்மை பெறவே இல்லை. ராஜிவ் கொலை செய்யப்பட்ட பின்னணியில் நடந்த தேர்தலில்கூட அக்கட்சி பெற முடிந்த இடங்கள் மெஜாரிடிக்கு 30 சீட் குறைவுதான்.
  கூட்டணி யுகம் உதயமாயிற்று. அது வளர்ந்து வலுவடைந்து, பிராந்தியக் கட்சிகளின் தயவு இல்லாமல் மத்தியில் எந்த தேசியக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்பது இன்று நடைமுறையாகி விட்டது. இந்த நிலையில் மோடி 300+ என்ற அசாத்தியமான நம்பரை குறி வைப்பது ஏன்?

  முதல் காரணம், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டிய நிலையை அவர் தவிர்க்க விரும்புகிறார். எந்த இலாகாவை விட்டுக் கொடுப்பது என்பதில் தொடங்கி, கிடைத்த இலாகாவை பயன்படுத்தி முடிந்தவரையில் பொதுச் சொத்துகளை கபளீகரம் செய்வதுவரை கூட்டணிக் கட்சிகள் என்ன செய்தாலும் தடுக்க முடியாமல் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை தனக்கு நேரக்கூடாது என்பதில் மோடி உறுதியாக இருக்கிறார். சுற்றிலும் திருடர்களை வைத்துக் கொண்டு ’நான் நேர்மையாகத்தானே செயல்படுகிறேன்’ என்று நெஞ்சைத் தொட்டுப் பார்த்து திருப்தி அடைய அவரொன்றும் மெத்தப் படித்த மேதை மன்மோகன் அல்லவே.

  இரண்டாவது காரணம், பிரதமர் நாற்காலியில் அமர்ந்த பிறகு கட்சியின் மூத்த தலைவர்களோ அல்லது ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளோ ஆலோசனை என்ற பெயரில் குறுக்கீடு செய்வதையும் மோடியால் ஜீரணிக்க முடியாது. சீனியர்கள் என்ற ஒரே தகுதியில் கட்சியில் சிலர் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் அடிக்கடி குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த தேர்தலோடு அத்வானி, ஜோஷி உள்ளிட்ட முதிய தலைவர்களுக்கு விடை கொடுக்க அவர் முடிவு செய்துவிட்டார். அதில் அவரிடம் தயக்கமோ ஒளிவு மறைவோ கிடையாது. வெற்றி பெற்று பழக்கப்பட்ட தொகுதிகளுக்கு மாறாக தோல்வி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை சீனியர்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் மோடி காட்டிய வைராக்கியம் கட்சிப் பிரமுகர்களால் பிரமிப்புடன் அலசப்படுகிறது.

  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவும் வழிகாட்டுதலும் இல்லாமல் பிஜேபி இயங்குவது கடினம் என்று பலர் நம்புகிறார்கள். அது உண்மைதான். இந்த தேர்தலில் வென்று அக்கட்சி ஆட்சி அமைக்கும்போது, வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி, அனந்த் குமார், நிதின் கட்கரி, சிவராஜ் சவுகான் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் மோடியின் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள். அப்போது கட்சியை நடத்திச் செல்ல தலைவர்களுக்கு தட்டுப்பாடு வரும். அதை சமாளிக்க ஆர்.எஸ்.எஸ் இப்போதே இரண்டாயிரம் பேரை தயார் செய்துவிட்டது. அந்த அமைப்பில் பிரசாரக் என்று குறிப்பிடப்படும் இவர்கள், கட்சி நிர்வாகம் குறித்த பாடங்கள், பயிற்சிகளை முடித்துவிட்டு கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். இல. கணேசன், கோவிந்தாச்சார்யா, சேஷாத்ரி சாரி போன்றவர்கள் அவ்வாறுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பிஜேபிக்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வளவு ஏன், ஆர்.எஸ்.எஸ் பிரசாரக்காக இருந்த நரேந்திர மோடியே டெபுடேஷனில் பிஜேபிக்கு வந்தவர்தான்.

  அதனால் அவருக்கு தாய்க்கழகத்தின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அத்துபடி. வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் செய்த தவறை தானும் செய்ய மோடி தயாரில்லை. பிரதமராகவும் துணைப் பிரதமராகவும் உயர்ந்த பின்னர், ஆர்.எஸ்.எஸ் வளையத்தில் இருந்து விடுபட்ட சுதந்திர தலைவர்களாக காட்டிக் கொள்ள அவர்கள் இருவரும் முயற்சி செய்தனர். பாரதத்தின் வரலாற்று நாயகனாக வாஜ்பாய், அவரது வெல்ல முடியாத தளபதியாக அத்வானி ஆகியோரை சித்திரப் படுத்தியதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா, என்ன? புறக் கண்களுக்கு புலப்படாத விஸ்தாரமான கட்டமைப்பு கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புறக்கணிப்பால் அந்த தலைவர்களின் முயற்சிகள் எடுபடவில்லை. அதை அருகிலிருந்து பார்த்தவர் மோடி. எனவே, புத்திசாலித்தனமாக வேறு வழியை தேர்ந்தெடுத்தார். ஆர்.எஸ்.எஸ் தலைமையுடன் இணக்கமாக நடந்துகொண்டே, மெல்ல மெல்ல தன் பாணிக்கு அதை திருப்புவது அவர் திட்டம்.

  ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு நினைவிருக்கலாம்.
  ஆர்.எஸ்.எஸ் ஆணைப்படி பிஜேபி தலைவராக்கப்பட்ட நிதின் கட்கரியிடம் மோடி பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ’பிரதமர் ஆகக்கூடிய தகுதி படைத்தவர்கள் என் கட்சியில் ஆறேழு பேர் இருக்கிறார்கள்; மோடி எட்டாமவர்’ என்று பதில் அளித்திருந்தார். அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா போன்றவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் முகத்தில் கடுப்பு காட்டியோ, ட்விட்டரில் பதிவிட்டோ, வெளிநடப்பு செய்தோ தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பார்கள். மோடி அவ்வாறு தன் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு நன்றாகவே தெரியும், டெல்லி சிம்மாசனம் மீது கண் வைக்கும் தனக்கு செக் வைக்க ஆர்.எஸ்.எஸ் ஏற்பாட்டில் தலைவரானவர்தான் கட்கரி என்பது. ஆகவே செய்தியாளர்கள் துருவித் துருவி கேட்டும்கூட, ‘எட்டாவது குழந்தை என்ன செய்தது என்பது புராணங்களை படித்தவர்களுக்கு புரியும்’ என்று பூடகமாக குறிப்பிட்டார். அசுரன் கம்சனை வதம் செய்த பகவான் கிருஷ்ணன் எட்டாவது குழந்தை என்பது தெரியும்தானே. விரைவிலேயே கட்கரி பதவியை பறிகொடுத்தார். அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தவர் ராஜ்நாத் சிங். யாரும் எதிர்பாராத வகையில், ‘மோடியை விட்டால் இந்தியாவுக்கு நாதியில்லை’ என்று முதல் முழக்கம் செய்தார். குஜராத் முதல்வரின் காய் நகர்த்தும் சாமர்த்தியத்துக்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு. கட்கரி பினாமி பெயர்களில் நிறைய கம்பெனிகள் நடத்தி வந்த விவகாரம் குஜராத்தில் இருந்துதான் வெளிச்சத்துக்கு வந்தது என்பதை சொல்லிக் காட்ட தேவையில்லை.

  ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பொருத்தவரை சில அசைக்க முடியாத நியதிகள் உண்டு. தனி மனிதனைவிட கட்சி பெரிது. கட்சியைவிட லட்சியம் பெரிது. தனிநபர் துதி தவறானது. கூட்டுத் தலைமை சிறப்பானது. இப்படியாக. ஆனால், மோடி இதற்கு நேர்மாறான தடத்தில் பயணம் செய்பவர். இந்தியர்களுக்கு ஹீரோ ஒர்ஷிப் முக்கியம் என்பதை அவர் உணர்ந்திருப்பதுபோல் காங்கிரஸ்காரர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள். ஹீரோ எப்படி இருக்க வேண்டும்? பலசாலியாக, எதற்கும் அஞ்சாதவனாக, எதிரிகளை இல்லாமல் ஆக்குபவனாக இருக்க வேண்டும்; எந்தக் கேள்வியும் இல்லாமல் எல்லோரும் அவனது துதி பாட வேண்டும். அதைத்தான் சாதித்திருக்கிறார் மோடி. பத்தாண்டுகளுக்கு மேலாக சந்தடியில்லாமல் குஜராத்தில் இளைஞர்கள் பட்டாளம் ஒன்றை உருவாக்கி, ஆர்.எஸ்.எஸ் மூலமாகவே அதற்கு பயிற்சியும் அளித்து, தேசபக்தி என்ற தலைப்பில் அதற்கு அரசியல் உத்திகளை கற்றுக் கொடுத்து, அந்த மாநிலத்தை தனக்கான ஏவுதளமாக நிர்மாணித்திருக்கிறார் அவர்.

  அமெரிக்காவில் பரவிக் கிடக்கும் பணக்கார குஜராத்திகளும், இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழிலதிபர்களும் எதிர்காலக் கனவுகளுடன் அந்த தளத்திலிருந்து மோடியை டெல்லி தர்பாரில் கொண்டு சேர்க்கும் அரசியல் ராக்கெட்டுக்கு எரிபொருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

  ’இந்தியாவை பலமான நாடாக மாற்றி, இந்துக்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிற உங்கள் லட்சியத்தை நிறைவேற்ற இதைவிட அருமையான சந்தர்ப்பம் வாய்க்காது; அதை நிறைவேற்றித்தர என்னைவிட பொருத்தமான ஆளை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைமையை நம்பவைத்தது மோடியின் விடாமுயற்சிக்கு கிட்டிய பெரும் வெற்றி.

  வலிமை என்பது ஆர்.எஸ்.எஸ் அபரிமிதமாக நேசிக்கும் இரண்டாவது வார்த்தை. பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கிய இந்திரா காந்தியை மனமார பாராட்டியது. இந்தியாவை ஆளவும், இந்து தர்மங்களை காப்பாற்றவும் வலிமையான தலைவரால்தான் முடியும் என அது நம்புகிறது. எத்தனை தடுத்தும் எழுந்து நிற்கும் மோடியை அது இப்போது அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளது. இரு தரப்பும் அவரவர் லட்சியங்களை பரஸ்பரம் பூர்த்தி செய்ய எழுதப்படாத உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

  இந்த பின்னணியில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும்போது வெளிப்படையான தொடர்புகள் தெரியவில்லை என்றாலும், ஓட்டுப்பதிவு நேரத்தில் கிளைமாக்சாக என்ன நடக்குமோ என்ற சிந்தனையை அவை கிளறி விடுகின்றன.

  ’இந்திய மண் மீது ஆசைப்படுவதை நிறுத்திக் கொள்’ என்று சீனாவுக்கு மோடி எச்சரிக்கை விடுக்கிறார். ’சீனாவிடம் அடைந்த தோல்விக்கு நேருதான் காரணம்’ என்று ஹெண்டர்சன் ப்ரூக்ஸ் அறிக்கையை ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பத்திரிகையாளர் அம்பலப்படுத்துகிறார். ’கிரீமியாவை ரஷ்யா பிடித்ததுபோல அருணாசல் பிரதேசத்தை சீனப்படைகள் வசப்படுத்தும்’ என்று ஒரு தகவல் பரப்பப்படுகிறது. ’விபரீதமாக எதையாவது செய்து தொலைக்காதே’ என்று சீனாவை எச்சரிக்கிறது அமெரிக்கா.

  ’பாபர் மசூதி இடிக்கப்பட்டது உணர்ச்சிவசப்பட்ட இந்து தொண்டர்களால் அல்ல; அது அத்வானி, கல்யாண் சிங் ஆகியோர் ஒரு மாதம் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். அன்றைய பிரதமர் நரசிம்ம ராவுக்கும் தெரியும்’ என்று கோப்ராபோஸ்ட் ஒரு ரகசிய தொகுப்பை ஒளிபரப்புகிறது. ‘நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல’ என்று விளக்கம் தர வேண்டிய கட்டாயத்துக்கு மூத்த பிஜேபி தலைவர்களும் காங்கிரசும் தள்ளப்படுகின்றனர்.

  ’காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம். இந்தியாவில் பிறந்த எவரும் சிறுபான்மையினர் என்று கூறிக்கொள்ள முடியாது. மதத்தின் பேரால் அரசு சலுகைகள் வழங்கக்கூடாது. உணவுக்காக பசுவை கொல்லக்கூடாது. இந்தியா என்ற பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என திருத்த வேண்டும்… என்று சர்ச்சைக்குரிய பல கோஷங்களை பிஜேபியும் அதன் சார்பு அமைப்புகளும் எழுப்பி வருகின்றன. இவை குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நான்கைந்து தேசிய சிறுபான்மை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதுவரை மோடி பதிலளிக்கவில்லை. அவரது முன்னூறு எம்.பி.க்கள் பேச்சு குறித்து மற்ற கட்சிகள் அதிர்ச்சி அடைய காரணம் இதுதான்: ‘இந்தியாவின் அடித்தளத்தையே மாற்றியமைக்க மோடி திட்டமிடுகிறாரோ?’

  அங்கொரு மாற்றம், இங்கொரு மாற்றம் என்பது மோடிக்கு பிடிக்காது. அடியோடு மாற்ற வேண்டும் என்பது அவரது இலக்கு. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால்தான் அரசியல் சாசனத்தில் கைவைக்க முடியும். அவர் ஆசைப்படுவது போல பிஜேபிக்கு 300 தொகுதிகள் கிடைத்துவிட்டால், அடிப்படைகளை மாற்றுவதற்கு தோழமைக் கட்சிகளை சம்மதிக்க வைக்கலாம் என்று நம்புகிறார்.

  அப்படி நடந்தால் உலகம் திரும்பிப் பார்க்காமல் என்ன செய்யும்?

  (இழு தள்ளு 18 / கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் 13.04.2014)
  1509273_822563767771201_2089649643210206418_nKathir Vel

   
 • Tags: , ,

  அழுவாத மொவளே ..

  970929_623129074432492_2010700015745096037_nஅக்காவும்
  அண்ணனும்
  ஸ்கூலுக்குப் போறதைப் பார்த்த
  செல்ல குட்டிக்கும்
  ஸ்கூல் போக
  ஆசை வந்துச்சு !

  ” வேண்டாங்கண்ணு ..
  அடுத்த வருஷம் போலாம்” னு
  சொன்ன
  அம்மா பேச்சை கேக்காம
  ” ம்…ம்..ம்… நானும் போவேன்” னு
  அடம் புடிச்சு அழுதுச்சு !

  பள்ளிக்கூடம் தொறந்தாச்சு !
  பூக்குட்டி …

 • புது உடுப்பு போட்டு
  புது பேன்ட் போட்டு
  புது ஷூவும் போட்டு
  டையும் கட்டி
  புது ஸ்கூல் பையிலே
  புது பொஸ்தவம் நோட்டு
  புது பென்சில் எடுத்து வச்சு
  ஸ்கூல் பஸ்சிலே ஏறிச்சு !

  வழக்கம் போல
  அம்மாக்காரியும்
  கூடவே வருவான்னு நெனச்சி
  ” அம்மா நீயும் வா ” ன்னு
  கூப்புட்டுதாம் !

  அம்மாக்காரி பஸ்சுல போகாம
  பிள்ளைக்கு முத்தம் கொடுத்து
  போய் வா கண்ணே ன்னு
  டாட்டா மட்டும் சொன்னாளாம் !
  அப்பத்தான்
  சின்னக்குட்டிக்கு தெரிஞ்சுதாம்
  அம்மா வரமாட்டா
  டாட்டாதான் வரும்னு !

  அப்புறம்
  சின்னக்குட்டியின்
  அழுகை
  பஸ்ஸில ஆரம்பிச்சு
  ஸ்கூலிலே தொடர்ந்து
  வீட்டுக்கு திரும்பி வந்து
  அம்மா மடியில
  மொகத்தை வச்சு ஒப்பாரியாயி
  இப்போ
  தூகத்திலேகூட விடாம
  தெவங்கிகிட்டு இருக்கா !

  அம்மாக்காரியும் மனசுக்குள்ளே
  அழுது அழுது
  அவளும் கூட
  தூங்காம தவிக்கிறா !

  காலையில
  ஸ்கூல் பஸ் வரும் சத்தம்
  கனவில கேட்டு
  பிள்ளை கதறுது
  பெத்தவ மனசு பதறுது !

  ஓடிப்போச்சு காலம் !
  இப்போ …
  பிள்ளை அஞ்சாம் வகுப்புப் போகுது !
  அம்பது பிள்ளைகளோட
  ஸ்கூல் பஸ்சு
  கிளம்புது
  கூத்து கும்மாளத்தோட !

  @ நேற்று முதல்நாளாக பள்ளிக்கூடம் சென்ற என் பேரன் ரசீன்
  மற்றும் அன்புக் குழந்தைகளுக்காக …
  Abu_HaashimaAbu Haashima Vaver

   
 • இயற்கை உணவு முறை,

  கள்ளிமுளையான் இனிப்பும் !
  கிழுவை காரக்காய் புளிப்பும் !
  பனம்பழ ஈச்சம்பழ வாசம் !
  சப்பாத்தி பழ உதட்டு சாயம் !
  அணில் கடித்த கோவப்பழம் !
  தேன் பூவின் இனிப்பு வாசம் !
  சுக்கம்பழம் கலாப்பழ சுவை !
  நாரு மாங்காய் பல் கூச்சல் !
  புலியங்காய் வெல்லச்சுவை !
  ,,,,,, இப்படியே சாப்பிடுவது ,
  எவ்வளவு சுகம் ! ஆகா ! ஆகா !
  ——————————————————-

 • ஊமைத்தம்பூவும் கரிக்கொட்டையும் ,
  அரைச்சு பூசிய கரும்பலகையில் ,
  சிலேட்டு பென்சிலில் எழுதிய ஞாபகம் !
  இன்று இவர்கள் சிலேட்டுக்கே ,
  கிடைய்க்கல ஊமத்தம் பூவல்ல !
  இலவச தரமான கல்வி !
  ————————————-

  அனுபவத்திற்கும் புதியதோர் அனுபவம் !
  தேன்பூவில் உறிந்த தேனிக்களாய் !
  ஊதாப்பூவை உறிந்து மாடு மேய்த்தோம் !
  கலாக்காயும் காரைக்காயும் உண்ணும் ,
  சுகமும் கற்றுக்கொண்டோம் !
  கம்ப்யூட்டர் தெரிந்தாலும் !
  இந்த சுகமும் பெரிதான சுகமே !
  உழைப்பும் வேண்டும் படிப்பும் வேண்டும் !
  வேண்டாதவர்கள் வேண்டியே ஆகவேண்டும் !
  இனிவரும் காலத்தில் விவசாயத்தை !
  என் பிள்ளைகளுக்கு ,
  விவசாயமும் தெரியும் !
  விஞ்ஞானமும் தெரியும் !
  பெற்ற பிள்ளைகளின் பெருமையுடன் !
  ——————————————————————
  எனது தோட்டத்தில் இயற்கையாக விளைவித்தது !இயற்கை விவசாயம் ,
  1506422_624491107622255_1623018767_n
  ——————————————————————-
  இயற்கை உணவு முறை,
  உயிரியல் சார்ந்த பண்ணை,
  குடில் வாழ்க்கை ,,,,,,
  விரும்புவோர் ,
  தகவல் பெறுவதற்கு தங்களின் பெயர் அலைபேசி எண்ணுடன் இன்பாக்சில் தொடர்புகொள்ளவும் !

  மேலும்,
  இது பயிற்சி இல்லை இயற்கையோடு இணைந்து செயல்படும் இயற்க்கை வாழ்வியல் ,,,,,
  இது ஒரு குழுவாக சேர்ந்து செயல்படுத்தப்படும் !

  அன்புடன் சத்தியா !Civil engineer
  10151337_647318325339533_6329838751456053238_nSathiyananthan Subramaniyan Banumathi
  ——————————————————————

   
 • Tags: , , , ,

  முன்னாள் முதலாளியும் முதல் முதலாளியும்…..

  1395396_341405542670036_221500433_nவிதவிதமான மனிதர்களை கையாளவேண்டியுள்ள சிரமமான வேலை ஜவுளிக்கடை சேல்ஸ்மேன் வேலை.அதனால் அவர்களுக்கு பொறுமை மிக முக்கியம்,

  நானும் என் வாழ்க்கையை ஜவுளிக்கடை சேல்ஸ்மேன் உத்யோகத்தில்தான் ஆரம்பித்தேன்,மாதம் 300 ரூபாய் சம்பளம்.
  ஆனால் நான் பணிபுரிந்த கடையில் நான் சாப்பிடவோ அல்லது வேறு வேலையாகவோ வெளியில் சென்றிருந்தால் வாடிக்கையாளர்கள் மன்சூர்தான் அட்டண்ட் பண்ணனும் என்று காத்திருந்து என்னிடமிருந்து வாங்கிச்செல்வர்.

 • “நீ எந்த வேலை செய்தாலும் உன்னைவிட அந்த வேலையை யாராலும் சிறப்பாகச் செய்யமுடியாத அளவு உன் முத்திரை அதில் இருக்கவேண்டும்” என்கிற என் முதல் முதலாளியின் அறிவுரை என்னை இன்னும் வழிநடத்துகிறது.

  சிலவருடங்களுக்குமுன் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த என் முதலாளி தன்னை “நான்தான் மன்சூர் பாயோட முன்னாள் முதலாளி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது
  நான் இடைமறித்துச் சொன்னேன்,

  “இல்லை சார்,நீங்கதான் என்னோட முதல் முதலாளி”
  Nisha Mansur
  வாழ்த்துகள் to நிஷா மன்சூர்

   
 • ஏமாற்றாதே ! ஏமாறாதே !?

  இவ்வுலகில் ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று ஒரு பழமொழி சொல்ல நாம் கேட்டிருப்போம். ஏமாற்றுவேலை என்பது பொருள்களை விற்ப்பதில்,பணம்காசு கொடுக்கல்வாங்களில், கொடுத்தவாக்கை நிறைவேற்றுவதில், இப்படி இன்னும் எத்தனையோ வகையில் ஏமாற்றுவேலைகள் இவ்வுலகில் பலதரப்பட்ட வகையில் அனுதினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிறரை ஏமாற்றி பெறுவது அல்லது ஏமாற்றி அடைவது நல்ல பழக்கமல்ல. பிறரை ஏமாற்றும்போது எதையோ நாம் பெரிதாக சாதித்து விட்டது போல சந்தோசமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஏமாற்றுவேலை அதிகநாள் நீடிப்பதில்லை.என்றாவது ஒருநாள் அனைவருக்கும் அறியத்தான் செய்யும். அப்போது மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தி தம்மீது உள்ள மரியாதையை, நம்பிக்கையை இழக்கச்செய்யும்.

 • சொல்லப்போனால் பிறரை ஏமாற்றி விற்பனை செய்யும் பொருளானாலும், செய்யும் தொழிலானாலும், பார்க்கும் வேலையானாலும் இன்று இல்லையேல் ஒருநாள் அதற்க்கான மாற்றுபலன் கிடைக்கத்தான் செய்யும். அந்த ஏமாற்றுவேலை வெளிச்சத்திற்கு வந்துதான் ஆகும். அப்படித்தெரியும் பட்சத்தில் ஏமாற்றி விற்கப்படும் தரம் குறைந்த பொருட்களை மக்கள் மீண்டும் அதை வாங்கப் போவதில்லை.அதுமட்டுமல்ல ஏமாற்றிய கடைக்காரரிடம் வைத்திருந்த நம்பிக்கையும் போய் மீண்டும் வேறு பொருட்களை அந்தக் கடையில் நம்பி வாங்க மனம்வராமல் போய் விடுகிறது. இப்படி ஏமாற்றுவதன் காரணமாக வாடிக்கையாளர்கள் குறைந்து வியாபாரம் பாதிப்புக்குள்ளாகி அத்தோடு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அந்த ஸ்தாபனத்தை இழுத்து மூடும் சூழ்நிலை ஏற்ப்பட்டுப்போய் விடுகிறது. ஆகவே ஏமாற்றுவேலை வெகுநாட்கள் நீடிப்பதில்லை.

  பார்க்கும் வேலையில் ஏமாற்றினாலும் இதேகதிதான். தம்மீதுள்ள நம்பிக்கை போய் விட்டால் அந்த நபரை நம்பி வேலையை ஒப்படைக்க மனமில்லாமல் போய்விடுகிறது. பிறகு அவருடைய வருமானத்திற்க்கே ஆபத்தாகிவிடும். இதை சிலர் உணர்வதில்லை. பாதிப்பு வரும்போதுதான் நினைத்து கவலை கொள்வார்கள்.

  அதுபோல ஒரு அலுவலக பணியாளர் பொய்யான காரணங்கள் சொல்லி வேலையை ஏமாற்றிவருவது தெரியவந்தால் அவருக்கு பணிஉயர்வு, சம்பளஉயர்வு, பிறசலுகைகள் ஏதும் இல்லாமல் போய்விடுகிறது. வேலையை இழக்கவும் நேரிடுகிறது. அடுத்த நிறுவனத்தாரும் அவருக்கு வேலை வாய்ப்பளிக்க அச்சப்படுவார்கள்.

  கெட்ட பெயர் ஒருபுறமிருக்க இருந்த வேலையையும் இழந்து நிம்மதியில்லாமல் மன நோயாளியாய் மாறும்நிலை உருவாகிவிடுகிறது. ஏமாற்று வேலை அதிகநாள் நீடிக்காது. ஏமாற்று வேலைக்கு ஆயுள் குறைவே. அது நிலைத்து நிற்ப்பதில்லை

  சிலசமயம் சந்தர்ப்பசூழ்நிலையில் ஏமாந்து போவதும் உண்டு. அத்தருணத்தில் தான் ஏமாந்ததை சரிசெய்ய அடுத்தவர்களை ஏமாற்றுகிறார்கள். இதுபற்றி தெரிய வரும்போது தான் ஏமாந்த விஷயத்தை சொல்லி நியாயப்படுத்த முயற்சிப்பார்கள். அது ஒருக்கிலும் நியாயமாகாது. இப்படியும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  அடுத்து ஏமாறுபவர்கள் பக்கம் பார்க்கப் போனால் சரியான விழிப்புணர்வு இல்லாததே முதற்க்காரணமாக இருக்கிறது.

  கவர்ச்சி,மோகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தக் காலத்தில் இவைகளைக் கொண்டு மக்களை எளிதில் ஏமாற்ற முடிகிறது. காரணம் இக்காலத்து மக்கள் கவர்ச்சியான விளம்பரங்கள், கவர்ச்சியான ஆடைகள், கவர்ச்சியான பேச்சுக்கள் என அனைத்திலும் கவர்ச்சியையே அதிகம் விரும்புகிறார்கள்.

  அனைத்திலும் கவர்ச்சியே ஆக்கிரமித்து விட்டது. ஆதலால் கவர்ச்சியில் உலகே மயங்கிக்கிடக்கிறது. ஏமாற்றுபவர்களுக்கு இது மிகவும் நல்லதொரு சாதகமாகவும், சந்தர்ப்பமாகவும் அமைந்து விடுகிறது.

  பெரும்பாலும் பொதுமக்கள் பொருளின் தரத்தைப்பார்ப்பதை விட அதனைப் பேக் செய்து வைத்திருக்கும் கவர்ச்சியைப் பார்த்துதான் வாங்குகிறார்கள்.

  இன்னும் பார்ப்போமேயானால் சிறுதொழில் செய்பவர்கள் மலிவான விலையில் தரமான பொருளை நேர்மையாக விற்றாலும் அதை விரும்பி வாங்குபவர்கள் மிகக்குறைவே யாகும். அதேபொருளை பெரிய அங்காடிகளில் வண்ண வண்ண நிறத்துடன் பேக் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்றாலும் அதைத்தான் வாங்கிச் செல்கிறார்கள்.

  ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை ஏமாற்று வேலைகள் முடிவில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.

  எனவே மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதுடன் ஏமாற்றுபவர்களும் மக்கள்நலன், நாட்டுநலன் கருதி பிறரை ஏமாற்றாது நேர்மையாக நடந்து கொண்டால் தமது தொழில் மட்டுமல்ல நம்நாடே நேர்மையான நாடென உலகநாட்டு மத்தியில் சிறந்த பெயருடன் தலைநிமிர்ந்து நிற்கும்.

  mysha-8அதிரை மெய்சா
  http://nijampage.blogspot.in/2014/04/blog-post.html?showComment=1396399377366

   
 •  
  Follow

  Get every new post delivered to your Inbox.

  Join 26 other followers